தமிழகம் வரும் மோடிக்கு ஒரு மடல்

பிரதமர் மோடி அவர்களுக்கு.... வணக்கம்.
தங்களுடைய இடையறாத வெளிநாட்டுப் பயணங்களுக்கு இடையில் தமிழகத்தில் கோவை என்று ஒரு ஊர் இருக்கிறது என்பதை நினைவில் கொண்டு வருகை தருவதற்கு நன்றி. நீங்கள் தேர்தலின் போது தமிழ் நாட்டிற்கு வந்து திருச்சியில் பேசினீர்கள். அப்போது உரையை துவக்கும் போது ‘வன்கோம்’ என்று செந்தமிழில் செப்பி யதை கேட்டு சுருண்டு விழுந்த தமிழ் இன்னமும் எழுந்திருக்கவே இல்லை. அடுத்து தங்கள் உரையில் வ.உ.சி இதே திருச்சியிலிருந்துதான் வேதாரண்யத்திற்கு உப்புக் காய்ச்ச புறப்பட்டார் என்று குறிப்பிட்டீர்கள் அல்லவா. அப்போதே தெரிந்து விட்டது நீங்கள் ஆட்சிக்கு வந்தால் வரலாறை ஒரு வழி செய்யாமல் விடமாட்டீர்கள் என்பது. கோவையில் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரியை துவக்கி வைக்கப் போவ தாகவும் அதைத் தொடர்ந்து பாஜக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்க போவதாகவும் அறிந்தேன்.

ஆடு மேய்த்த மாதிரியும் ஆனது அண்ணனுக்கு பெண் பார்த்த மாதிரியும் ஆயிற்று என்று தமிழ்நாட்டில் ஒரு சொலவடை உண்டு. அரசு செலவிலேயே பாஜகவிற்கு பிரச்சாரம். பாஜக கூட்டணி என்று கூறுவதுதான் புரியவில்லை. உங்கள் கூட்டணியில் தமிழிசை, பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, இல.கணேசன் தவிர இன்னும் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று கோவைக் கூட்டத்தில் கூறினால் தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். நீங்கள் தமிழகம் வந்து சென்ற பிறகு பாஜக நிமிர்ந்து நிற்கும் என்று தமிழிசை புல்லரித்து கூறியுள்ளார். ஏதாவது மூட்டுவலி தைலம் கையோடு கொண்டு வருகிறீர்களா? தமிழக அமைச்சர்களுக்கு ஆளுக்கொரு பாட்டில் கொடுத்தால் நல்லது!திருச்சியில் பேசும் போது ஆதார் அட்டை தேவையில்லை என உச்சநீதி மன்றம் சொன்னபிறகும் அதற்காக பணம்செலவழிப்பது ஏன்? மக்களை அலைக் கழிப்பது ஏன்? இதில் கை மாறிய தொகை எவ்வளவு? என்று கையை காலை ஆட்டி ஆவேசமாகக் கேட்டீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக ஆதார் அட்டையை கிழித்து எறிந்து விடுவீர்கள் என்று நம்பினேன். ஆனால் நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு சமையல் எரிவாயு துவங்கி 100 நாள் வேலைத்திட்டம் வரை அனைத்திற்கும் ஆதார் கேட்பது தொடர்கிறது. போகிற போக்கைப் பார்த் தால் கழிவறைக்கு செல்வதற்கு கூட ஆதார்தேவைப்படும் போலிருக்கிறது. இப்போதும் தொகை கைமாறுவது தொடர்கிறதா? என்று தங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன்.நாட்டில் மிகப்பெரிய நிறுவனங் களெல்லாம் வங்கிப் பணத்தை கொள்ளை யடிக்கின்றன. ஆனால் ஒரு லட்சம் இரண்டுலட்சம் கடன் வாங்கிய சிறு வியாபாரிகள் பணம் கட்டத் தவறினால் அவர்களது புகைப்படத்தை பேப்பரில் போட்டு அசிங்கப்படுத்துகிறார்கள். இதனால் அந்த வியாபாரிகள் தற்கொலை செய்து கொள் கிறார்கள் என்று உருக்கமாக பேசியதைக் கேட்டு கண்ணீர் விட்டு கதறி அழுதேன்.

இதனால்தான் நீங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதானி என்கிற பெட்டிக் கடை வைத்திருப்பவரை ஆஸ்திரேலியா அழைத்துச் சென்று அங்குள்ள நிலக்கரி சுரங்கத்தை வாங்குவதற்கு ஸ்டேட் வங்கியிலிருந்து பல ஆயிரம் கோடி கடன் வாங்கிக் கொடுத்தீர்கள் போலிருக்கிறது.திருச்சி பெல் ஆலை குறித்தும் திருச்சி கூட்டத்தில் பேசினீர்கள். மத்திய அரசின் கொள்கை காரணமாக பெல் ஆலை சிரமப்படுவதாகவும் அதனைச் சார்ந்துள்ள சிறு தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டதாகவும் கூறினீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தபிறகு திருச்சி பெல் ஆலை முதன்முறையாக 50 ஆண்டுகால வரலாற்றில் நஷ்டத்தை சந்தித்துள்ளது. பெல் ஆலைக்கு போட்டியாக எல்அன்டிநிறுவனத்தை குஜராத்தில் வளர்த்து விடு கிறீர்கள்.

என்டிபிசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் ஆர்டர்களைக் கூட டெண்டர் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கைமாற்றி விடுகிறீர்கள். தமிழ்மொழி ஒரு அழகான மொழி என்றும் தேன் போல இனிக்கிறது என்றும் பேச்சை முடிக்கும் போது கூறினீர்கள். ஆனால் ஆட்சிக்கு வந்தபிறகு சமஸ்கிருத மொழியையும் இந்தி மொழியையும் திணிக்கிறீர்கள்.

தேன் போல இனித்த மொழி தற்போது தேள் போல கொட்டுவது ஏன்? மனதிலிருந்து வானொலியில் பேசும் பிரதமர் மோடி அவர்களே மனதைத் தொட்டுச் சொல்லுங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்நாட்டிற்கு ஏதாவது உருப்படியாகச் செய்திருக்கிறீர்களா? கடந்த தேர்தலின் போது தாங்கள் எங்கள் காதுகளில் போட்ட பூந்தோட்டம் இப்போது பூத்துக் குலுங்குகிறது. போதும்! வசன வார்த்தைகள். இனிமேலும் தாங்கும் சக்தி எங்கள் காதுகளுக்கு இல்லை. - இப்படிக்கு, ஏமாந்த சோணகிரி
மதுக்கூர்ராமலிங்கம்
நன்றி:தீக்கதிர் நாளிதழ்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்


Comments