தீபாவளி பண்டிகையை தமிழர்கள் கொண்டாடலாமா?


 தீபாவளிக்கு என்ற வார்த்தை தீபாவளி தினதிற்கு முன்று மாதங்களுக்கு முன் புழங்கத் தொடங்கி,தீபாவளி பட்ஜெட் என்ன?, எந்த கடையில துணி எடுப்பது?, தீபாவளிக்கு என்ன சினிமா?தீபாவளி இலவசங்கள் .... இப்படி பல வகையில் பேச்சு தொடங்கி தீபாவளிக்கு ஒருமாதம் இருக்கும் போது உச்சக்கட்டத்தை அடைகிறது.இப்படி தமிழர்களால் விமர்சையாக கொண்டாடப்படுகிற தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா? தீபாவளி கொண்டாட்டம் தமிழகத்தில் எப்போது துவங்கியது?...

      இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாக கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி,நகர்ப்புறம் சார்ந்ததாகவும், துணி,எண்ணெய்,மாவு, பட்டாசு, ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத் திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால் , இது தமிழர்களின் தேசிய திருவிழா போலக் கொண்டாடப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப்படுவதில்லை.தைப்பொங்கல் சமய எல்லைகளைக் கடந்த திருவிழா. எனவேதான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழர்களின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழாவாக அமைகிறது.

          தீபாவளி தமிழ்நாட்டின் மரபுவழிபொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும், சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. தீபாவளியின் அடையாளமான வெடி, அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்கு பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை. விளக்குகளின் வரிசை என்ற பொருள்படும் தீபாவளி(தீப+ ஆவளி)  என்னும் வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் புழக்கத்தில் இல்லை.தமிழர்களின் விளக்குத்திருவிழா என்பது திருக்கார்த்திகை திருவிழாவே. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்.

இந்த நாளே பிராமணிய மதத்தின் எதிரியான சமணமதத்தின் இருபத்து நாலாம் தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த (இறந்த ) நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றி கொண்டாடுமாறு மகாவீரர் தம்மதத்தவரை கேட்டுக்கொண்டார்.அகவே பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளும் தீபாவளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். விசயநகரப் பேரரரசின் இந்து சாம்ராஜ்ஜியம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டு தொடங்கிய தீபாவளி இங்கு ஒரு திருநாளாக் கொண்டடப்படுகிறது.
         இதனாலேயே தமிழப் பிராமணர்களை விட தமிழ்நாட்டிலுள்ள தெலுங்கு பிராமணர்களே தீபாவளியைப் பக்தி சிரத்தையுடன் கொண்டாடுகின்றனர்.வடநாட்டு இந்துக்களிடமும் சமணர்களிடமும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் இத்திருவிழா நாளான்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். எண்ணெய் தேய்த்துக் குளித்தல் என்பது தமிழ்நாட்டில் நீத்தார் நினைவில் (இறந்து போனவர்கள் நினைவாக) இறுதி நாளைக் குறிக்கும் சடங்காகும். தமிழ்நாட்டு பிராமணர்களும் இத்திருவிழாவை இறந்தார் இறுதிச் சடங்கு போல கங்காஸ்நானம் செய்து கொண்டாடுவது குறிப்பிடத்தக்கதாகும். ஆகவே உண்மையில் இத் திருவிழா பார்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.
 நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா என்று பாரதிதாசன் பாடுவது இங்கு நினைவுக்குறியது.
-தொ.பரமசிவன்
பண்பாட்டு அசைவுகள் நூலிலிருந்து....

விமர்சனம் எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

பேராசிரியர் தொ.பரமசிவன் அய்யாவின் கருத்துகள் மிகவும் அருமை. நான் தொ.பரமசிவன் அய்யாவின் தீவிர வாசகன். அவரது பண்பாட்டு அசைவுகள், சமயம், தெய்வம் என்பதோர், நாள் மலர்கள் என்னும் புத்தகங்களோடு அவரது சிறப்பான ஆய்வுநூலான அழகர்கோயில் புத்தகமும் வாசித்திருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி. நான் சில வருடங்களாகவே தீபாவளி கொண்டாடுவதில்லை.